நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானம்

தமிழ் சைவ பாரம்பரியத்தை தொன்றுதொட்டு பேணிவரும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் 1450 ஆம் ஆண்டளவில் நல்லூரை தலைநகரமாக்கிய படைத்தலைவனான செம்பகப்பெருமாளால் ஸ்தாபிக்கப்பட்டது என யாழ்ப்பாண கைலாயமாலையின் தனிச்செய்யுள் கூறுகின்றது. கி. பி. 1620 களில் அப்போதிருந்த போர்த்துக்கேய நிர்வாகத்தால் ஆலயம் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டது என்றும், நல்லூர் முருகனுக்கு பல ஆலயங்கள் அமைந்து அழிவுற்ற போதிலும், 1734ஆம் ஆண்டு முதலாம் ரகுநாத மாப்பாண முதலியார் இன்றைய நல்ல ஆதீனம் அமைந்துள்ள இடத்தில் வேல் பெருமான் வழிபாட்டை நடத்தியுடன் அந்த வேல் பெருமானே இன்றும் நல்லூர் கந்தசுவாமியாராக ஆலயத்தின் மூலஸ்தானத்திலும் அமைந்து அருள்பாலித்து வருகின்றது.
ஆலயம் அம்பலவாணர் சுப்பிரமணியன் என கந்தசுவாமியாரின் பெயரில் பதியப்பட்டு, இன்றுவரை ஆலயத்துக்கு சொந்தமான எல்லா அசையும் அசையா சொத்துக்களும் கந்தசுவாமியார் பெயரிலேயே அமைந்திருப்பதும், அதற்கு கால காலமாக மாப்பாணர் மரபினர் அறங்காவலர்களாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் ஆறுமுக மாப்பாணர் காலத்தில் ஆலய விடையங்கள் பதியப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, அத்துடன் பிள்ளையார், வைரவப்பெருமான் ஆகியோருக்கு தனிச்சந்நிதிகளும் அமைக்கட்டது. தொடர்ந்து மூன்றாம் ரகுநாத மாப்பாணர் காலத்தில் கோயிலை சுற்றி வேலி அமைக்கப்பட்டதுடன் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவமும் ஆரம்பிக்கப்பட்டது. வருடார்ந்த மகோற்சவம், ஆடி அமாவாசை கழிந்த ஆறாம் நாள் - ஷஷ்டி திதி கூடிவருகையில் - கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் வெகு விமர்சையாக - கந்தசுவாமியார் கல்யாண கோலாகலனான உள்வீதி மற்றும் வெளிவீதி வரும் ஆனந்த காட்சியை காண ஆயிரம் கண்களும் போதாது.
இரண்டாம் ஆறுமுக மாப்பாணரின் காலத்தில் தூய பக்திமார்க்கத்துடனான ஆலய நிருவாகம் உள்வீதி கொட்டகைகள் அமைக்கவும் மணிக்கூட்டி கோபுரம் அமையப்பெறவும், ஷண்முகப்பெருமான் ஸ்தாபனம் நிகழவும் கந்தசுவாமியாரின் அருள் கைகூடியது. யாழ்ப்பாண ஆசாரிகளால் அமைத்து வார்த்தெடுக்கப்பட்ட ஷண்முகப்பெருமான் தேர்த்திருவிழாவின் போது எழுந்தருளி அருள்பாலித்தலும், இன்றளவும் பெருவியாபகமாக போற்றப்படும் ஷண்முகருக்கான வெள்ளி சிம்மாசனம் அமைக்கப்பட்டதும் இக்காலத்திலேயே ஆகும். தொடர்ந்து 1972 க்கு பின்னர், நான்காம் ரகுநாத மாப்பாணர் காலத்தில் அர்ச்சனை சீட்டு முறையும் நேரம் தவறாத பூஜை முறையும் முக்கியம் பெற்று, இன்றுவரை ஒரு ரூபாய் அர்ச்சனை சீட்டு, நேரமுகாமைத்துவம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் உலகெல்லாம் ஆலயம் திகழ்வது கந்தசுவாமியார் அருளினாலன்றோ.
நான்காம் ரகுநாத மாப்பாணர் காலத்தில், முத்துக்குமார சுவாமி பிரதிஷ்டை, பழனியாண்டவருக்கான சந்நிதி அமைக்கட்டதுடன் பிரதான இராஜ மற்றும் ஷண்முக கோபுரங்கள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஷண்முகதாஸ மாப்பாண முதலியார் காலத்தில் நிறைவேறியது.
இராஜகோபுர பணி நிறைவை தொடர்ந்து, கோபுரத்தின் இருமருங்கிலும் மணிக்கூட்டி கோபுரங்கள் அமைக்கப்பட்டதும், ஷண்முக தீர்த்த கேணிக்கு கொட்டகை அமைக்கப்பட்டதும், பள்ளியறை பூஜைக்காக வள்ளிக்காந்தர் மூர்த்தி அமையப்பெற்றதும் - பள்ளியறை பூஜைக்காக விமானம் அமைக்கப்பட்டதும் இவரின் காலத்திலேயே ஆகும். அத்துடன், ஆலயத்தின் பழைய தேர் பழுதடைந்த காரணத்தால் புதிய தேருக்கான திருப்பணிகள் நடைபெற்றதும், ஷண்முக பெருமான் புதிய - இன்றுள்ள - தேரில் முதல்முதலில் ஆரோகணம் செய்ததும் மேலும், தீர்த்த திருவிழா அன்று தில்லை சிதம்பர ஆடல்வல்லானை போல, பஞ்சமூர்த்தி பவனிவரும் தரிசனமும் தொடங்கிவைக்கப்பட்டது இக்காலத்திலேயே ஆகும். இக்காலப்பகுதியிலேயே, உலகில் முதல்முதலாக இந்தக்கோயில் ஒன்றின் திருவிழாவினை வானொலி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதும் ஆகும்.
1964 ஆம் ஆண்டு பத்தாவது நிர்வாகியாக கடமையேற்ற குமரேச மாப்பாணர் காலத்திலேயே ஆலயம் மேலதிக பொலிவு பெற கந்தசுவாமியார் அருள் கைகூடிற்று. நல்லூர் கந்தப்பெருமான் அலங்கார கந்தனாக மிளிர்ந்து அருள்பாலிக்க, வசந்தமண்டபம் வியாப்பிக்கப்பட்டது, 1966 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டதும், மகா மண்டபம், ருத்ர மண்டபங்கள் அமைக்கப்பட்டதுடன், ஷண்முகருக்கான தனிச்சபை, முத்துக்குமாருக்கான விமானத்துடன் கூடிய சந்நிதி, தேருக்கான தேர்முட்டி, மற்றும் யாழ்ப்பாணத்தின் அடையாளமாக திகழும் இராஜகோபுரத்துக்கு முன்னதான சொக்கட்டான் பந்தல் வடிவிலான வில்லு மண்டபம் அமைக்கப்பட்டதும் இவரது காலத்திலேயே ஆகும். இவரது காலப்பகுதியிலேயே கிளிக்கோபுரம் (2011), குபேர கோபுரம் (2016) அமைக்கப்பட்டதும், ஷண்முக புஷ்கரணி தீர்த்த மண்டபம் (2016) புனருத்தானம் செய்யப்பட்டதும், ஷண்முகப்பெருமானுக்கான சொர்ண ஸ்தூபி மற்றும் கலசங்கள் அமையப்பெற்றதும் ஆகும்.
இன்று ஆலயம் குமரேஸ் சயந்தன மாப்பாண முதலியாரின் அறங்காவலோடு மேலும் மிளிர கந்தசுவாமியாரின் அருள் கைகூடியுள்ளது. 2023 ஆம் ஆண்டு குமாரகோபுரம் அமையப்பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றத்துடன், கந்தவேள் பெருமான் சொர்ண வாகனங்களில் உலாவரும் அழகும் கைகூடியது அடியார்கள் யாவரும் செய்த தவப்பலனே ஆகும்.